அருள்மிகு ஸ்ரீ சூரிய நாராயணஸ்வாமி திருக்கோவில் (சூரியனார்கோவில்)

God Name : சூரிய நாராயணஸ்வாமி மற்றும் இதர கிரகங்கள்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

முக்காலமும் உணர்ந்த காலவ மகரிஷி தனக்கு வரவிருக்கும் தொழுநோயைப் பற்றி முன் கூட்டியே அறிந்து கொண்டு, நவக்கிரகங்களை நோக்கி தவமிருந்து, வரங்கள் பெற்று, வரவிருந்த நோயிலிருந்து தப்பித்துக் கொண்டார். எதிர் காலத்தில் நடக்கவிருந்த நிகழ்வை தடுத்ததாலும், தங்களது அதிகார வரம்பை மீறி வரமளித்ததாலும், பிரம்மன் நவக்கிரகங்களுக்கு சாபமிட்டார். சாபத்தினால் தொழுநோய் கொண்ட நவக்கிரகங்கள், அருகேயுள்ள திருமங்கலகுடி எனும் ஸ்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு விமோசனம் பெற்றனர் என ஸ்தல வரலாறு. சூரியன் தலைமையில் நவக்கோள்கள் தவமியற்றி சாப விமோசனம் பெற்ற இந்த வெள்ளெருக்கு வனம் சூரியனார்கோவில் என்றழைக்கப்படுகிறது. உச்சிக்கிழான் கோட்டம் என சிலப்பதிகாரம் வர்ணிக்கின்றது. முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட ஆலயம். (1079 - 1120) மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்து வடக்கே சூரிய புஷ்கரிணி எனும் தீர்த்தம் இருக்கின்றது. சூரியன் அஷ்ட திக் பாலகர்களில் ஒருவன். சூரியனை, நாராயண அம்சம் என்றும், சிவனுடைய அஷ்ட மூர்த்தங்களில் சூரியனும் ஒருவன் என்றும் கூறுவர். சூரியனை ஒளி ரூபமாகவும், மந்திர ரூபமாகவும் வழிபட்டனர் நம் முன்னோர்கள். நவக்கிரகங்களின் தலைவன் சூரியன். களத்திர தோஷம், விவாஹ பிரதி பந்த தோஷம், புத்திர பிரதி பந்த தோஷம், வித்யா பிரதிபந்த தோஷம், உத்யோக பிரதி பந்த தோஷம், சூரிய தசை - சூரிய புக்தி நடப்பவர்கள், கிரக தோஷம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமைகளில் வந்து வழிபட்டு பரிகாரம் தேடிக் கொள்கின்றனர். ஓம் எனும் ஓசையிலிருந்து ஒளி மயமான சூரியன் தோன்றினான் என மார்க்கண்டேய புராணம் கூறுகிறது. விராட புருஷனின் கண்களிலிருந்து தோன்றியதாகவும் கூறுவர். காசிபருக்கும் அதிதிக்கும் பிறந்த பன்னிரெண்டு புத்ரர்களே பன்னிரு சூரியர்கள் என பாரதம் கூறுகிறது. ஒரே ஒரு சக்கரம் உள்ள தேரை, ஏழு வித நிறங்களைக் கொண்ட ஏழு குதிரைகள் இழுக்க, அருணன் சாரதியாக ஓட்ட, மேற்கு முகமாக ஓடும் தேர், மேரு மலையை வலமாக சுற்றி வருவதாக கூறப்படுகிறது. சூரிய உபாசனை, சூரிய நமஸ்காரம், ஆகியன மிகவும் பயன் தருவது. ஆதித்ய ஹ்ருதயம் எனும் மந்திர உபதேசம் பெற்ற ஸ்ரீ ராமர் ராவணனை வென்றார். நவக்கிரக ஸ்தலங்களுள் ஒன்று - சூரிய ஸ்தலம்
மூலவர்: சூரிய நாராயணஸ்வாமி, தேவியர்கள்: உஷா, பிரத்யுஷா. மூலஸ்தானத்தில் மூலவராக சூரிய நாராயணஸ்வாமி நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களைத் தாங்கியுள்ளார். உஷா - பிரத்யுஷா தேவியர்கள் உடன் உள்ளனர். சூரியனைப் பார்த்தவாறு பிரஹஸ்பதி எழுந்தருளியுள்ளார். கிழக்கு பார்த்த சந்நிதி. பிப்ரவரி மாதம் 26, 27, 28 தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மாலை நேரத்தில் மூலஸ்தானத்தில் படர்ந்து, ஒளி ஏறி - இறங்கி அடங்கும் காட்சி பார்க்க ஆனந்தமாக இருக்கும். சூரியனது துவஜஸ்தம்பமாக குதிரை நிற்கின்றது. மதில் சுவர்களின் மேலும் குதிரை சிலைகள் காணப்படுகின்றன. பலி பீடத்திற்கு கிழக்கே உள்ள மண்டபத்தில் குதிரை வாகனம் உள்ளது. மற்ற ஏழு கோள்களும் வலச்சுற்றில் தனி சந்நிதிகளைக் கொண்டு தரிசனம் தருகின்றனர். கிரகங்கள் ஒன்பதுமே கைகளில் ஆயுதங்கள் இன்றி, வாகனங்கள் இல்லாது, அனுக்ரஹ மூர்த்திகளாக எழுந்தருளி உள்ளனர். உள்ளே நுழைந்தவுடன் கோள் தீர்த்த விநாயகரை வணங்கி ஆசி பெற வேண்டும். நவக்கிரகங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்ட விநாயகர். கோள்களின் கோளைத் தீர்த்து வைத்தமையால் கோள் தீர்த்த விநாயகர் எனப் பெயர் கொண்டார். பின்னர் படிக்கட்டுகளில் ஏறி நர்த்தன மண்டபம் சென்று அருகேயுள்ள சபாநாயகர் மண்டபத்தில் நடராஜரையும், உற்சவ மூர்த்திகளையும் தரிசிக்கலாம். அடுத்துள்ள ஸ்தபன மண்டபத்தில் விசாலாட்சி உடனாய விஸ்வநாதரை வழிபட்டு, பின்னர் நவ கோள்களை தரிசித்து, மீண்டும் விநாயகரை வழிபட்டு 9 முறை பிரதக்ஷிணம் செய்வது இத்தலத்து வழிபாட்டு முறையாகும். எப்படி வணங்க வேண்டும் என்கிற குறிப்பை கோவில் வாசலில் எழுதி வைத்துள்ளனர். தென்மேற்கில் சனீஸ்வரர், தெற்கில் புதன், தென் கிழக்கில் அங்காரகன், கிழக்கில் சந்திரன், வடகிழக்கில் கேது, வடக்கில் சுக்கிரன், வடமேற்கில் ராஹு அடுத்து தேஜஸ் சண்டீஸ்வரர் என தனித்தனி சந்நிதிகளில் கோவில் கொண்டுள்ளனர். சூரியனை பரீட்சித்தும், சந்திரனை சித்ராங்கத பாண்டியனும், அங்காரகனை புரூரவ மன்னனும், புதனை சோமசன்மனும், குருவை இந்திரனும், சுக்கிரனை தூமகேதுவும், சனீஸ்வரனை நளனும் வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றனர் என ஸ்தல வரலாறு.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.