அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோவில் (அறப்பள்ளி - கொல்லிமலை)
God Name : அறப்பளீஸ்வரர் எனப்படும் தர்மகோசீச்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
1400 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட கோவில் எனக் கல்வெட்டுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ராஜராஜ சோழனின் பெரிய பாட்டியார் செம்பியன் மஹாதேவி திருப்பணிகளைச் செய்துள்ளார்.
வியாசர் இம்மலையை அளவு எடுத்துப் பார்த்ததில் நான்கு பாகங்களும் சரியாக இருந்ததால் சதுரகிரி எனப் பெயர் வைத்தார் எனக் கூறப்படுகிறது.
வாலிக்கு பயந்து சுக்ரீவன் ஒளிந்து கொண்டிருந்த ரிஷ்யமுக பர்வதம்தான் தற்போது கொல்லிமலை என அழைக்கப்படுவதாக கூறுவர். இம்மலையில் வாலி பஞ்ச லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டானாம். சீதையைப் பிரிந்த ராமர் இம்மலைக்கு வந்து ஹனுமனையும் சுக்ரீவனையும் சந்தித்து அவர்களின் நட்பைப் பெற்று, வாலியை வதம் செய்ததாக நயனாசல புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சநதியாற்று மீனை யாரும் பிடிப்பதில்லை. அதற்கு உணவு தருகின்றனர். மீனைப் பிடித்து அதற்கு மூக்கு குத்தி மகிழ்கின்றனர். ஒரு சமயம் ஒருவர் இங்குள்ள மீன்களைப் பிடித்து அறுத்து சமைக்கும் போது கொதிக்கின்ற குழம்பிலிருந்த மீன்கள் உயிர் கொண்டு தாவிக் குதித்து ஓடியதாம். அறுத்த மீனிலும் உயிரைப் பொருத்திய அறப்பளீஸ்வரர் என்பர்.
ஆடி பதினெட்டாம் பெருக்கின்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆடி 17, 18, 19 தினங்களில் ஓரி விழா அங்கவை - சங்கவை அரங்கில் நடக்கும். வாசலூர்பட்டி படகு சவாரி, மலைவாழ் மக்களான மழவர் - கொங்கர் ஆகியோருடன் நடனம் போன்றவைகள் சிறப்பாக நடக்கும்.
காகபுஜண்டர், மாணிக்க சித்தர் ஆகியோர் தவம் புரிந்த இடங்களைக் காணலாம். பற்பல சித்தர்கள் வாழ்ந்த பூமி.
கடையேழு வள்ளல்களுள் ஒருவரான வல்வில் ஓரி ஆண்ட பிரதேசம். ஓரி எனும் சொல்லுக்கு ஒப்பற்றவன் எனப் பொருள். ஒரு சமயம் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது ஒரு காட்டு யானையின் மீது அம்பை ஏவினான் ஓரி. இவனது வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு யானையைத் தாக்கி வீழ்த்தியதோடு அல்லாமல் சீறிச் சென்ற புலியையும் அதைக் கடந்து அருகே நின்ற மானையும் அடுத்து ஒரு பன்றியையும் சாய்த்துவிட்டு மரத்தில் ஊர்ந்து கொண்டிருந்த உடும்பையும் துளைத்தது என புறநானூறு விவரிக்கின்றது.
தேவார வைப்புத்தலம்.
மூலவர்: அறப்பளீஸ்வரர் எனப்படும் தர்மகோசீச்வரர். அம்பாள்: தாயம்மை எனப்படும் தர்மகோளீஸ்வரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் அறப்பளீஸ்வரர். லிங்கத் திருமேனியின் உச்சியில் கலப்பையின் நுனி பட்ட காயத் தழும்பு ஒன்றினைக் காணலாம். சுயம்பு லிங்க மூர்த்தம். கிழக்கு பார்த்த சந்நிதி.
இவருக்கு மஹாலிங்கநாதர், தர்மகோசீச்வரர் என்றெல்லாம் திருநாமங்கள் உண்டு.
ஸ்வாமி கோஷ்டத்து வடக்கில் பிரம்மா இல்லை. மேற்கில் திருமாலுக்கு நேராக வீரபத்ரர் இருக்கின்றார்.
துவாரபாலகர்கள், நந்தியம்பெருமான், கொடிமரம், அர்த்த மண்டபம், மஹா மண்டபம் அனைத்தையும் கொண்ட ஆலயம்.
தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் தாயம்மை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். தர்மகோளீஸ்வரி என்றொரு பெயரும் உண்டு.
அம்பாள் சந்நிதி எதிரேயுள்ள மண்டபத்து விதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அஷ்டலட்சுமி ஸ்ரீ சக்கர மஹா மேரு ஒரே கல்லால் உருவாக்கப்பட்டது என்பர். நுணுக்கமான பல அரிய வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. மந்திர சக்தி மிக்கது என்பதால் அதன் கீழ் அமர்ந்து பக்தர்கள் தியானம் செய்கின்றனர்.
தென் பிரகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு விநாயகப் பெருமான் எழுந்தருளி ஆசி வழங்குகின்றார். மேல் விதானத்தில் கணநாதரும் - வழிபடும் கணங்களும் சுதை வடிவில் காட்சி தருகின்றனர்.
தென் பிரகாரத்தில் வடக்கு நோக்கியவாறு மயில் மீதமர்ந்த ஆறுமுகன் தரிசனம் தருகின்றார். வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். தனது தாயை நோக்கியவாறு ஆறுமுகன் காட்சி தருவது தாயம்மையின் சினத்தைத் தணிப்பதற்காக எனக் கூறப்படுகிறது.
விசாலாட்சி உடனாய காசி விஸ்வநாதர் சந்நிதியை காசியில் இருப்பது போலவே நீண்ட கூரிய கோபுரத்துடன் அமைத்துள்ளனர். நாற்பதுக்கு நாற்பது நீள அகலம் கொண்ட அர்த்த மண்டபத்தில் சோமாஸ்கந்தர், சிவகாமி உடனாய நடராஜர் மற்றும் உற்சவ மூர்த்தங்களைக் காணலாம்.
வலச்சுற்றில் லட்சுமி - சரஸ்வதி - துர்க்கை, தட்சிணாமூர்த்தி, கால பைரவர், சூரிய - சந்திரர்கள் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.