அருள்மிகு வீர ராகவப் பெருமாள் திருக்கோவில் (திருவள்ளூர்)
God Name : மூலவர் : ஸ்ரீ வீர ராகவப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
வீக்ஷாரண்ய க்ஷேத்ரமான இத்தலத்தில், மது - கைடப அசுரர்கள், பதுங்கிக் கொண்டனர். தனது சக்ராயுதத்தால், அவர்களை சம்ஹாரம் செய்த பெருமாள், விஜயகோடி விமானத்திலிருந்தார் என ஐதீகம். வீரத்துடன் போரிட்டு சம்ஹாரம் செய்ததால் வீரராகவன் என்ற திருநாமம். வைத்ய வீரராகவன் என்றும் போற்றுவர்.
இத்தலமருகே இருந்த அரசனின் மகளாக பிறந்த திருமகள், வஸூமதி எனும் பெயர் கொண்டு, வளர்ந்து வந்தாள். ஒரு ராஜகுமாரனைப் போல தோற்றம் கொண்டு அரசனிடம் வந்து, பெண் கேட்டு, அரசனின் ஒப்புதலுடன், அவளை மணக்கிறார் ஸ்ரீ வீர ராகவப் பெருமாள். பின்னர் தனது சுயரூபம் காட்டி, சந்நிதிக்குள் மறைந்தார், என ஸ்தல வரலாறு.
சாலிஹோத்ர மாமுனிவர், இத்தலத்தில் நீண்ட தவம் மேற்கொண்டார். ஓராண்டிற்குப் பிறகு, ஒரு தை அமாவாசை நாளன்று, தவம் முடிந்து, கண் விழித்து, மாவு உணவு வகைகளை செய்து, அதிதிகளுக்கு தர, காத்திருந்தார்.
ஒரு கிழ அந்தணன் தோற்றத்தில், முனிவரிடம் வந்த பெருமாள், அதிதிக்கு வைத்திருந்த உணவை உண்டு விட்டு, களைப்பாற வேண்டி, 'உறைதற்குரிய உள் எவ்வுள்?' என்று வினவினார்.
சாலிஹோத்ர முனிவர், தனது பர்ணசாலையைக் காட்ட, அந்த கிழவர், தெற்கே தலை வைத்து படுத்து, தமது நிஜஸ்வரூபத்தைக் காட்டினார். 'எவ்வுள்' என்று கேட்டமையால், இவ்வூர் திரு எவ்வுள் எனப் பெயருற்று, பின்னர் மருவி தற்போது திருவள்ளூர் எனப் பெயர் கொண்டது.
ஹ்ருதபாபநாச தீர்த்தம் - புஷ்கரிணி பிரசித்தமானது. ஹ்ருத - ஹ்ருதயத்தில், தாப - பாபங்களை, நாசினி - போக்கக் கூடியது. இதில் நீராடினால் பாபங்கள் விலகும் என்ற நம்பிக்கை. அமாவாசை நாட்களில் கூட்டமாக பக்தர்கள் நீராடுவார்கள். தை அமாவாசை விசேஷம். தை அமாவாசையன்று கங்கை முதலான புண்ய நதிகள் இதில் கலக்கின்றன.
வீரபத்ரர் - தட்சனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, இந்த புஷ்கரிணியில் நீராடி, பெருமாளை தரிசித்துக் கொண்டு, தீர்த்தேஸ்வரர் என்ற பெயருடன் இங்கு கோவில் கொண்டுள்ளார்.
திருப்பதியைப் போலவே இத்தலத்திற்கு தனியே சுப்ரபாதம் உண்டு.
சாலிஹோத்ர மகரிஷிக்கு பெருமாள் செய்து கொடுத்த பிரமாணத்தின்படி, அமாவாசை தினங்களில் ஸ்வாமியை வழிபடுவோர் சகலவிதமான கஷ்டங்களிலிருந்தும் நிவர்த்தி பெறுவர். ப்ரத்யும்ன மகாராஜாவிற்கு புத்ர பாக்யம் அருளிய ஸ்தலம்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - சப்த ராம க்ஷேத்ரங்களுள் ஒன்று
மூலவர் : ஸ்ரீ வீர ராகவப் பெருமாள், தாயார் : ஸ்ரீ கனகவல்லி
மூலஸ்தானத்துள் மூலவரான ஸ்ரீ வீர ராகவப் பெருமாள், பாம்பணையின் மீது, புஜங்க சயனமாக, தெற்கே திருமுடி வைத்து, வட திசையில் திருவடிகள் நீட்டி, கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார். எவ்வுள் கிடந்தான் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. சந்தன எண்ணையில் அபிஷேகம். சதுர்முகன், சங்கரன், சாலிஹோத்ர மகரிஷி ஆகியோர்க்கு ப்ரத்யட்சம் ஆனதாக ஐதீகம்.
நாபிக்கமலத்தில் உள்ள பிரம்மதேவனுக்கு, இடது கரத்தால், ப்ரணவ தத்துவத்தை உபதேசித்தும், சாலிஹோத்ர முனிவரின் சிரசில், வலது கரத்தால், அபயப்ரதானம் செய்த வண்ணமுமாக தரிசனம் தருகின்றார்.
ஸ்ரீ கனகவல்லித் தாயார் தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். இவருக்கு வஸுமதி, ஸ்வர்ண சீதா ஆகிய திருநாமங்களும் உண்டு. கோவிலை விட்டு வெளியே போவதில்லை. படி தாண்டா பத்தினி என்பர்.
மூலஸ்தானத்து நேர் எதிரே உள்ள பதினாறு கால் மண்டபத்துள், அமர்ந்த கோலத்தில் அழகான கருடாழ்வார்.
மார்பில் விஜயவல்லி துலங்க, பதினாறு கரங்களுடன் சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், பாமா - ருக்மணி சமேத வேணுகோபாலன் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம். ஸ்ரீ ராமர் சந்நிதியில் - சீதா பிராட்டி, ஸ்ரீ ராமர், லக்ஷ்மணன், ஹனுமன் ஆகிய மூர்த்தங்களையும் சேவிக்கலாம். பூபாலராயர், மணவாள மாமுனி, சாலிஹோத்ர மகரிஷி ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.