அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோவில் (திருவலம்)
God Name : வில்வநாதேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
செங்கல்பட்டு
Call : +91-
அம்மையப்பரைச் சுற்றி வந்து, விநாயகர் மாங்கனியைப் பெற்றுக் கொண்டதால் இவ்வூருக்கு திருவலம் என்று பெயர் வந்ததாக கூறுகின்றனர். ஏதாவதொரு தீர்த்தத்தில் நீராடி, மலர்களால் சிவலிங்கத்தை அர்ச்சித்து, சிவபூஜை செய்ய பிரியம் கொண்டாள் பார்வதி தேவி. இத்தலத்தின் வடகிழக்கில் ஓடிக்கொண்டிருந்த நதியை, சிவபெருமான், "நீ வா" என்று கூப்பிட்டதால் இந்த நதிக்கு "நீ வா நதி" என்றே பெயர். (தற்போது பொன்னை என்று பெயர்).
இறைவனின் அபிஷேகத்திற்கு நீர் எடுத்து வரும் பக்தர்களை வழி மறித்து துன்புறுத்தி வந்தான் கஞ்சன் எனும் அசுரன். அவனுக்கு புத்தி புகட்டி பக்தர்களை காக்கும்படி கூறி நந்தியை அனுப்பினார் சிவபெருமான்.
போரில் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்த அசுரனை கண்டதுண்டமாக வெட்டி, உடலின் பாகங்களை சிதறி விழச் செய்கிறார் நந்தியம் பெருமான். தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட கஞ்சனை மன்னித்து, தனது பூதகணங்களுள் ஒருவராக ஆக்கிக் கொண்டார் சிவபெருமான். தொடர்ந்து காவல் புரியும் பொருட்டு நந்தியம் பெருமான் எதிர்புறமாக திரும்பியே நிலை கொண்டுள்ளார்.
கஞ்சனுக்கு முக்தி தந்த நாளில், காஞ்சனகிரியில் ஸ்வாமி எழுந்தருளும் விழா நடைபெறும். அந்த நாள் சித்ரா பௌர்ணமியில் வரும். அன்று இரவு 12 மணிக்கு காஞ்சனமலையிலிருந்து ஜோதி தெரிவதாக கூறுகின்றனர்.
மூலவர்: வில்வநாதேஸ்வரர், அம்பாள்: தனுமத்யாம்பாள்.
வலம்புரி விநாயகர், ஆத்மலிங்கேஸ்வரர், கால பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசித்து ஆசி பெறலாம்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் மூலவரான வில்வநாதேஸ்வரர். சுயம்பு மூர்த்தம்.
சதுர பீட ஆவுடையாருடன் கூடிய அழகிய திருமேனி. சுயம்பு மூர்த்தம் கிழக்கு நோக்கி தரிசனம் தருகின்றார்.
வல்லநாதர் என்றும் பெயர் உண்டு. தீக்காலி வல்லமுடைய பரமேஸ்வரர் என கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.
இடப்பக்கத்தில் உள்ள பள்ளத்தில் பாதாளேஸ்வரர் மற்றும் பிள்ளையாரை தரிசிக்கலாம். மிகப் பெரிய திருவுருவமாக நந்தியம் பெருமான் காட்சி தருகிறார். எதிர்புறமாக திரும்பியுள்ளார் நந்தி. வலப்புறமாக நாராயணனை தரிசிக்கலாம்.
காசி விஸ்வநாதர், சந்திரமௌலீஸ்வரர், அண்ணாமலையார், சதாசிவம், நீலகண்டம், சஹஸ்ர மஹாலிங்கம் ஆகிய மூர்த்தங்களை வெளிச்சுற்றில் தரிசிக்கலாம்.
அம்பாள் தனுமத்யாம்பாள் கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். சதுர்புஜங்களுடன் கூடிய அழகியத் திருமேனி. ஜடாகலபாம்பாள் (அ) தீக்காலி அம்பாள் என்ற பெயர்களுடன் உக்ரமாக இருந்த தேவியை சாந்தப்படுத்தியவர் ஆதிசங்கரர். பிறகு வந்த பெயரே தனுமத்யாம்பாள். தனு என்றால் உடல். சிவபெருமானின் உடலின் மத்திய பாகமாக அம்பாள் இருப்பதால் தனுமத்யாம்பாள் என்று பெயர்.
அம்பாளின் கோஷ்டத்தில் - நிருத்த விநாயகர், காத்யாயினி, ப்ராம்ஹி மற்றும் சண்டிகேஸ்வரியை தரிசிக்கலாம்.
கோஷ்டத்திலும் பிரகாரங்களிலும் எண்ணற்ற மூர்த்தங்கள் உள்ளன. நடராஜர் சபா மண்டபத்தில் 27 நட்சத்திரங்களின் திருவுருவங்களை தரிசிக்கலாம்.
சிறிய தனிக்கோவிலில் மூலவராக அம்பிகேஸ்வரரும் அம்பாள் ராஜேஸ்வரியும் எழுந்தருளியுள்ளனர். மூலவர் மீது பாம்பு குடை பிடிப்பது போல நாகலிங்கப்பூ காணப்படுகிறது. அருகே நாகலிங்க மரம். மற்றுமோர் சிறிய கோவிலில் மூலவராக சுந்தரேஸ்வரரும் அம்பாள் மீனாட்சியும் உள்ளனர். ஸ்வாமி கிழக்கு பார்த்தும் அம்பாள் தெற்கு பார்த்தும் காட்சி தருகின்றனர். அதிகார நந்தி ஸ்வாமியைப் பார்த்தபடி காணப்படுகிறார். ஆதிவில்வநாதரை தரிசிக்கலாம். மாங்கனியோடு பத்ம பீடத்தில் அமர்ந்துள்ள பிள்ளையார் மிகவும் அழகாக இருக்கிறார்.
நீராழி மண்டபத்துடன் கூடிய திருக்குளம் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.