அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில் (கூவம்)
God Name : திரிபுராந்தகேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
ஹிரண்யாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்கள், தத்தம் பறக்கும் கோட்டைகளில் பறந்து கொண்டு அனைவரையும் துன்புறுத்தி வந்தனர். இவர்களின் ஆணவத்தை ஒடுக்கி புத்தி புகட்ட எண்ணி, சிவபெருமான் கோபாவேசமாகப் புறப்பட்டார்.
மேருமலையை வில்லாக்கி, வாசுகி பாம்பை நாண் ஆக்கி, விஷ்ணு அம்பாக மாற, முப்புரங்களை வெல்ல சிவபெருமான் வில்லேந்திய வீரனாக நின்ற எழிற்கோலம் காரணமாக திருவிற்கோலம் எனப் பெயர் கொண்டது இவ்வூர்.
தேரின் அச்சு முறிந்தபோது ரிஷப வடிவம் கொண்டு தாங்கிய திருமால் கரிய மாணிக்கப் பெருமாள் என்ற திருநாமத்துடன் இவ்வாலயத்தின் தெற்கில் கோயில் கொண்டுள்ளார்.
(முப்புராதிகளை அழிக்க சிவபெருமான் வில் ஏந்தி புறப்பட்ட இடம் திருவிற்கோலம். விற்கோலத்தைக் கண்டு தேவர்கள் மகிழ்ந்தது இலம்பையங்கோட்டூர் எனுமிடம். தேர் அச்சு முறிந்தது அச்சிறுப்பாக்கம் எனுமிடம். திரிபுராதிகளை எரித்தது திருவதிகை எனுமிடம்.)
கர்மவினையைக் கடந்து சிவகதி அடையும் விதத்தைப் பற்றி நைமிசாரண்யத்தில் தவமிருந்து வந்த ரிஷிகளிடையே விவாதம் நடைபெற்றது. தவமே உகந்தது என வசிஷ்டரும், அறமே சிறந்தது என கௌதமரும், தானமே பிரதானம் என காசிபரும், வாய்மை என பரத்வாஜரும் விவாதித்தனர். அப்போது அங்கு வந்த சூதக முனிவர் - ஞானத்தால் மட்டுமே ஈஸ்வர க்ருபை கிட்டும் எனவும், அந்த ஞானத்தை அடைய சிவ ஸ்தலங்களுக்குச் சென்று வழிபடுவதே உகந்தது என்றும் அறிவுரை கூறினார். அத்தகைய சிவஸ்தலங்களுள் மேன்மையானது கூவம்பதி என்று மேலும் எடுத்துரைத்தார் என ஸ்தல வரலாறு.
சித்திரையில் பிரம்மோற்சவம் கொண்டாடுகின்றனர். 6வது நாள் காளிக்கு அருளிய நிகழ்ச்சி, 10ம் நாள் காளி சிவபூஜை செய்வது, அவளுக்காகப் பெருமான் காப்பு நடனத்தை ஆடிக் காட்டுவதும் ஐதீகமாகக் கொண்டாடப்படுகிறது.
தேவாரத் திருத்தலம்.
மூலவர்: திரிபுராந்தகேஸ்வரர், அம்பாள்: திரிபுராந்தகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் திரிபுராந்தகேஸ்வரர். சுயம்பு லிங்கம். தீண்டாத் திருமேனி. கிழக்கு நோக்கி தரிசனம் தருகின்றார். திருவிற்கோலநாதர் என்ற திருநாமமும் உண்டு. கஜப்பிருஷ்ட விமானம் கொண்ட கருவறை.
நாட்டில் போர் மூளும் அபாயம் என்றால் செந்நிறமாகவும், மழை மிகுதியாகப் பெய்தால் வெண்மை படர்ந்தும் நிறம் மாறும் அதிசய லிங்கம். அக்னி கலை ஞானத்தால் உருவாக்கப்பட்டு இருப்பதால்தான் மாறும் தன்மை இருப்பதாகக் கூறுகின்றனர். 16 முழ வேஷ்டி அணியும் பெரிய திருமேனி.
வலதுபுற மண்டபத்தில் காணப்படும் பல்லியை தரிசித்தால் தோஷங்கள் நீங்கும் என ஐதீகம்.
சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் அனைத்தும் பார்க்க அழகாக இருக்கின்றன. அச்சிறு விநாயகர், வாகனம் இல்லாத பைரவர் ஆகிய விசேஷ மூர்த்தங்களை அவசியம் தரிசிக்க வேண்டும்.
ரக்ஷா நடனம் ஆடிய நடராஜப் பெருமானை ரக்ஷா நடராஜர் என்கின்றனர்.
அம்பாள் திரிபுராந்தகி நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். திரிபுரசுந்தரி என்றும் அழைக்கிறார்கள். கிழக்கு பார்த்த சந்நிதி. ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கூவம் ஆற்றுக்கரையிலுள்ள திருமஞ்சன மேடை எனுமிடத்திலிருந்து (கோயிலிலிருந்து 2 கி.மீ.) தினந்தோறும் தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்கின்றனர். தீர்த்தம் கொண்டு வருபவர், சோம்பல் காரணமாக, வேறு ஏதாவது தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்யக் கொடுத்தால், சுவாமி மீது சிற்றெறும்புகள் படர்ந்து, தவறை சுட்டிக் காட்டி விடும் என அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
அச்சிறுகேணி என்கிற கூபாக்னி தீர்த்தம் கோயிலுக்கு கிழக்கில் திருக்குளமாக இருக்கிறது. இதில் தவளைகள் வசிப்பதில்லை.
குறிப்பு: அர்ச்சனை சாமான்கள், வேத பாடசாலைக்கு வேண்டிய பொருட்கள் ஆகியன கையோடு எடுத்துச் செல்ல வேண்டும். அர்ச்சகருக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். (இலம்பையங்கோட்டூரில் இருக்கிறார்)
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.