அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் (திருக்கோவிலூர் - கீழூர்)
God Name : மூலவர்: வீரட்டேஸ்வரர், உற்சவர்: அந்தகாசுர வத மூர்த்தி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
விழுப்புரம்
Call : +91-
அன்னை பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள். அகிலம் முழுவதும் இருள் சூழ்ந்தது. அப்படி ஏற்பட்ட இருட்டு அத்தனையும் ஒன்று சேர்ந்து, ஓர் அரக்கனாக உருவெடுத்தது. இருட்டு என்பதை அந்தகாரம் என்பர். எனவே அரக்கன், அந்தகாசுரன் எனப் பெயர் கொண்டான். தவம் செய்து பிரம்மாவிடம் வரங்கள் பல பெற்று, எல்லோரையும் இம்சிக்கலானான்.
அவனை அடக்க வந்த பூத கணங்கள், நந்தித் தேவர் மற்றும் சப்த மாதர்கள் யாவரும் அவனிடம் தோற்றுப் போயினர். இறந்த அரக்கர்களை பிழைக்க வைத்துக் கொண்டிருந்தார் சுக்ராச்சாரியார். சுக்ராச்சாரியாரைத் தன்னுடன் ஐக்யப்படுத்திக் கொண்டார் சிவபெருமான்.
அவனது அட்டகாசங்களுக்கு ஒரு முடிவு கட்டவும், நீண்ட போரை ஒரு முடிவுக்கு கொண்டு வரவும் எண்ணிய சிவபெருமான், தனது வலது தோளிலிருந்து ஒரு சக்தியை தோற்றுவித்தார். அந்த சக்தியே சிவனின் அம்சமான வடுக தேவர் என்பர்.
அந்த சக்தி அசுர படைகளை அழித்தது. பின்னர் சிவபெருமான், அந்தகாசுரனைத் தனது சூலத்தால் குத்தித் தூக்கினார். அசுரனின் ரத்தம் கீழே சிந்தி விடாமல் இருக்க காளிதேவி அதை ஒரு பாத்திரத்தில் பிடித்தாள். அப்போது 64 பைரவர்களும், 64 பைரவிகளும், மாத்ரு கணங்கள், டாகினி-யோகினி தேவதைகள், வாஸ்து புருஷன் ஆகியோர் தோன்றியதாக ஐதீகம்.
சூலத்தில் தொங்கி, ரத்தம் முழுவதும் இழந்து, உயிருக்கு போராடும் தருவாயில், அந்தகாசுரன் தன் தவறை உணர்ந்து பணிந்து நின்றான். அவனை மன்னித்து பூதகணங்களின் தலைவனாக ஏற்றுக் கொண்டார் சிவபெருமான், என ஸ்தல வரலாறு. (சூலத்தை ஏந்திய ருத்ரனுக்கு கங்காளன் என்று பெயர்).
சுந்தரரும், சேரமானும் கயிலாயம் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்ற சேதியை அறிந்தவுடன், ஒளவையார் தன்னால் போகமுடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அவசரமாகவும், வருத்தம் தோய்ந்த தொனியிலும், பிள்ளையாருக்கு பூஜைகளை செய்தார். காரணத்தை கேட்டறிந்த பிள்ளையார், சுந்தரரும் சேரமானும் கயிலாயம் போகும் முன்பே, தாமே ஒளவையாரைத் தமது தும்பிக்கையால் கயிலாயத்தில் கொண்டு சேர்த்தார். இதனால் பெரியானை கணபதி எனப் பெயர் கொண்டார்.
பாரி வள்ளலின் மகள்களுக்கு திருமணம் நடந்த இடம். 63 நாயன்மார்களுள் ஒருவரான மெய்ப்பொருள் நாயனார் ஆட்சி புரிந்த ஊர்.
தமது வடிவத்துள் ஐக்யப்படுத்திக் கொண்ட சுக்கிரனை, அவனது தோஷத்தை நீக்கி வெளியே விட்டார் சிவபெருமான், என்பதால் சுக்கிர தோஷ பரிகார ஸ்தலம் என்பர். சூரிய தோஷம் இருப்பவர்கள் அதினின்று விடுபட இங்குள்ள சிவசூரியனை பூஜிக்கின்றனர்.
தேவாரத் திருத்தலம் - அஷ்ட வீரட்டானங்களுள் ஒன்று - மகாபைரவ ஸ்தானம்.
மூலவர்: வீரட்டேஸ்வரர்் உற்சவர்: அந்தகாசுரவத மூர்த்தி் அம்பாள்: சிவாநந்தவல்லி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் வீரட்டேஸ்வரர். உயரமான பாணத்துடன் கூடிய பெரிய திருமேனி. கம்பீரமாக தரிசனம் தரும் சுயம்பு மூர்த்தம். பஞ்சநாகக்குடை ஆபரணமாக மேலும் அழகு சேர்க்கின்றது. மேற்கு பார்த்த சந்நிதி.
அம்பாள் சிவாநந்தவல்லி நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி.
வீரட்டகாச மூர்த்தியாக ஸ்ரீ அந்தகாசுர சம்ஹார மூர்த்தி தனி சந்நிதி கொண்டுள்ளார். மேற்கரங்களில் மான்-மழு ஏந்தியுள்ளார். கீழ்க்கரங்கள் இரண்டும் காலடியில் வீழ்ந்து கிடக்கும் அந்தகாசுரனை, சூலத்தால் குத்தும் கோலத்தில் காட்சி தருகின்றார். அருகே யோகேஸ்வரியாக நிற்கின்றாள் அம்பிகை.
வீரட்டானம் என்பது வீர ஸ்தானத்தைக் குறிக்கும். அந்தகாசுரனை சம்ஹாரம் செய்து வீரட்ட ஹாஸ (சிரிப்பு) புரிந்ததால் வீரட்டகாச மூர்த்தி எனப் பெயர் கொண்டார். உக்ரமாக இருக்க வேண்டிய வீரட்டகாச மூர்த்தி சிரித்த முகத்துடன் இருக்கின்றார்.
இந்த சம்ஹார மூர்த்தியின் சிற்பம் எல்லோரா குகையினில் வைக்கப்பட்டுள்ளது. இதனை அழகிய ஓவியமாக வரைந்து முகமண்டபத்தில் வைத்துள்ளனர்.
தென்மேற்கு மூலையில், ஸ்தல விநாயகரான பெரியானை கணபதி எழுந்தருளி அருள் புரிகின்றார். ஒளவையாரைத் தனது தும்பிக்கையால் கயிலாயம் கொண்டு சேர்க்க விஸ்வரூபம் எடுத்தவர் என்பதனால் பெரியானை கணபதி என்ற பெயர் கொண்டார்.
சோமாஸ்கந்தர், வரதராஜர், நடராஜர், பஞ்ச லிங்கங்கள், காசி விஸ்வநாதர், அர்த்தநாரீஸ்வரர், அகத்தீஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். ஆறுமுகப் பெருமானின் திருவுருவம் மனசிலேயே நிற்கிறது. திருவாசியுடன் சேர்த்து ஒரே கல்லில் உருவாக்கியுள்ளனர். பன்னிரு கரங்களுடன் கூடிய அற்புதமான திருமேனி. வள்ளி-தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர்.
அந்தகாசுரனை சம்ஹாரம் செய்தவர் பைரவ அம்சமாக கருதப்படுவதால், இத்தலம் மகாபைரவ ஸ்தானம் என்பர். க்ஷேத்ரபாலகராக எழுந்தருளியுள்ள பைரவர் இங்கு விசேஷமானவர். வழக்குகள் சுமுகமாக நடைபெற இவரை பூஜிக்கின்றனர். ஆணவ சம்ஹார ஞான மஹாபைரவர் எனப் போற்றுகின்றனர்.
வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி தினங்களில் விசேஷ பூஜைகள் செய்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.