அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில் (திருநள்ளாறு)
God Name : மூலவர்: தர்ப்பாரண்யேஸ்வரர், விடங்கர்: நகவிடங்க தியாகர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
ஸ்ருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவர் இவ்வுலகைக் கண்டு வர சுற்றி வரும் வேளையில், இந்த தர்ப்பாரண்ய க்ஷேத்ரம் வந்தார். இங்கே தர்ப்பை அடர்ந்த புதரில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை தரிசித்து, வேத மந்திரங்களால் ஸ்தோத்திரம் செய்து, படைப்புத் தொழிலைச் சரிவர செய்ய அருளுமாறு வேண்டினார்.
பிரம்மன், சரஸ்வதி, அன்னபட்சி மூவரும் இங்கு தீர்த்தங்களை அமைத்து, விதிப்படி மனத்தாலேயே ஒரு கோவிலைக் கற்பித்து படைத்தார் பிரம்மன்.
ஆற்றல், அழகு, வீரம் அனைத்தும் நிறைந்த நள மகாராஜன், தமயந்தி எனும் அழகிய பெண்ணை மணந்து ஆட்சி புரிந்து வந்தான். இவற்றால் பொறாமையுற்ற நளனின் பங்காளியான புட்கரன் என்பவன் கலி புருஷனை துணையாகக் கொண்டு, சூதாட்டத்திற்கு அழைத்து வஞ்சகமாக தோற்கடித்தான்.
இதனால் நாடு, நகரம், மனைவி, செல்வம் அனைத்தும் இழந்த நளன் காட்டில் திரிந்தான். கார்க்கோடகனால் தீண்டப் பெற்றான். பல இன்னல்களுக்குப் பிறகு இழந்தனவற்றை எல்லாம் திரும்பப்பெற்றான். இழந்தவற்றை திரும்பப் பெற்றும் மன நிம்மதியின்றி சித்தபிரமை பிடித்தவன் போலிருந்தான்.
பரத்வாஜ முனிவரின் யோசனைப்படி, திருநள்ளாறு வந்து சேர்ந்தான் நளன். இனியும் இவனைத் தொடர்ந்தால் சிவ அபராதி ஆவோம் என, சனி பகவான் நளனை விட்டுப் பிரிந்தார்.
நளனின் வழிபாட்டிலும், பூஜைகளிலும் மகிழ்ந்த இறைவன் பிரத்யட்சமாகி அவனுக்கு ஆசி வழங்கி நற்பலன்களை அளித்தார். சனீஸ்வர பகவானின் அருளும் கிடைக்கப் பெற்றான் நளன். தனக்கு நற்பலன்கள் வழங்கியது போல், எல்லோருக்கும் நற்பலன்கள் வழங்க இங்கேயே எழுந்தருள வேண்டும் என நளன் பிரார்த்தித்தான்.
கலிதோஷம் நீங்கப் பெற்று, சனீஸ்வரரின் அருளும் கிடைக்கப் பெற்ற நளன், இங்கு தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, கோவிலும் எழுப்பி வழிபாடு செய்தான் என ஸ்தல வரலாறு.
இவ்வலாயத்தில் பசுக்களை பராமரித்து வந்த கேதாரி என்னும் இடையனை, பொய்க்கணக்கு எழுத தூண்டிய கணக்கனின் தவறான எண்ணங்களைப் பற்றி இறைவனிடம் விண்ணப்பிக்கின்றான் இடையன். கணக்கனின் தலையைக் கொய்ய சூலத்தை ஏவினார் இறைவன். சூலத்திற்கு குறுக்கே நிற்கலாகாது என வழிவிட்டு, நந்தியும் பலிபீடமும் ஒதுங்கி நின்றன என ஸ்தல வரலாறு.
சமணர்களுடன் மதுரையில் வாதம் செய்த திருஞான சம்பந்தர் போகமார்த்த பூண் முலையாள் என்ற நள்ளாற்று பதிகத்தைப் பாடி தீயிலிட்டபோது, அது வேகாமல் பசுமையாக பச்சை பதிகமாக திரும்பி வந்தது. சைவத்திற்கு பெருமை சேர்க்க காரணமாயிருந்த பதிகம் பெற்ற ஸ்தலம்.
புத்திர பாக்யம் வேண்டி இந்திரன் தவமிருந்து, நகவிடங்கரின் அருளால், ஜயந்தன் எனும் புத்திரனைப் பெற்றான். இதனால் நகவிடங்கரை புத்திர தியாகர் என்றும் கூறுவர்.
பார்கவ முனிவரின் சாபத்தைப் பெற்ற கலிங்க மன்னன் ஒருவன் காட்டானையாக மாறி திரிந்து பின் நாரதரின் யோசனைப்படி, இத்தலம் வந்து அஸ்வமேத யாகம் செய்து, சாபம் நீங்கப் பெற்றான்.
விடங்கர்:
டங்கம் என்றால் உளி, விடங்கம் என்றால் உளி தீண்டாமல் உருக் கொண்டவர் எனப் பொருள்.
புத்திரப்பேறு வேண்டி, திருமால் - ப்ருகு மகரிஷியின் யோசனைப்படி, சோமாஸ்கந்தரை வழிபட்டு வந்தார். ஒரு க்ஷணமும் பிரியாது, சோமாஸ்கந்தரை பூஜித்து வந்தார் திருமால்.
புத்திர பாக்யம் வேண்டி திருமாலிடம் வந்த இந்திரனுக்கு தான் வழிபட்டு வந்த சோமாஸ்கந்தரை தந்தருளினார் திருமால்.
வாலாசுரன் எனும் அசுரன் தேவர்களை எல்லாம் வென்று தேவேந்திரனை போருக்கழைத்தான். இந்திரனால் அவனை வெல்ல முடியாமல் போனதால், வியாழனின் யோசனைப்படி, முசுகுந்த சக்ரவர்த்தியின் உதவியை நாடினான். எதற்கும் அஞ்சாத முசுகுந்தன் போரில் வாலாசுரனை தோற்கடித்து வெற்றி கொண்டான். வெற்றி பரிசாக திருமாலிடமிருந்து பெற்ற சோமாஸ்கந்தரை கேட்டான்.
அதை தர மனமில்லாத தேவேந்திரன், மயனின் உதவியுடன், அதைப் போலவே ஆறு மூர்த்திகளை உருவாக்கி, திருமாலிடமிருந்து பெற்றதையும் சேர்த்து, ஏழு மூர்த்திகளை முசுகுந்தனிடம் காண்பித்து இந்த ஏழு திருவுருவங்களில் நீ வேண்டுவது யாது எனக் கேட்டான்.
சிறந்த சிவபக்தனான முசுகுந்தனிடம், இறைவனே - இதனைக் கேள் என சுட்டிக் காட்டினார். இறைவனின் வழிகாட்டுதலால் சரியான மூர்த்தியை அடையாளம் காண்பித்த முசுகுந்தனின் அறிவாற்றலைக் கண்டு வியந்த இந்திரன், மயன் மூலமாக உருவாக்கிய ஆறையும் சேர்த்து ஏழு மூர்த்திகளையுமே முசுகுந்தனுக்கு பரிசாக தந்து விட்டான்.
இதுவே சப்த விடங்கர்கள் உருவானதற்கான புராண குறிப்புகள்.
மூலவர்: தர்ப்பாரண்யேஸ்வரர், விடங்கர்: நகவிடங்க தியாகர், அம்பாள்: போகமார்த்த பூண் முலையாள்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் தர்ப்பாரண்யேஸ்வரர். சுயம்பு மூர்த்தம். நள்ளாரப்பர் மற்றும் ஆதிமூர்த்தி என்று போற்றுவர். தர்ப்பையினால் உண்டான வடுக்கள் இவரது திருமேனியில் காணப்படுகின்றன. கிழக்கு பார்த்த சந்நிதி.
நந்தியும், பலிபீடமும் ஸ்வாமியை நோக்கி இராமல், சற்று ஒதுங்கியே காணப்படுகின்றன.
தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் போகமார்த்த பூண் முலையாள் எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். இவளுக்கு பிராணேஸ்வரி என்ற திருநாமமும் உண்டு. மிகுந்த வரப்பிரசாதி என்பர்.
சப்த விடங்கர்களில் இரண்டாவதான நகவிடங்க தியாகர் இங்கு வெள்ளி விதானத்தின் கீழ், வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி உள்ளார். மலை போல் கம்பீரமாக இருப்பதாலும், நாகம் பூண்டு கூத்தாடுவதாலும் நகவிடங்கர் எனப் பெயர் கொண்டார். நீலோத்பலாம்பிகை எனும் அம்பிகை உடன் உள்ளார்.
இவர் ஆடுவது உன்மத்த நடனம் - அதாவது பைத்தியம் பிடித்தது போல் முன்னும் பின்னும், மேலும்-கீழும் கவிழந்து ஆடுவதை உன்மத்த நடனம் என்பர்.
ஜாதிப்பச்சை ரத்தினத்திலான மரகதலிங்கம் ஒன்று நகவிடங்க தியாகர் சந்நிதியில் இருக்கின்றது. பெட்டகத்திற்குள் வைத்துள்ளனர். உஷத்காலம், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, இரண்டாம் காலம் ஆகிய வேளைகளில் வெளியே எடுத்து அபிஷேகம் செய்வார்கள். பின்னர் மீண்டும் பெட்டகத்திற்குள்ளேயே வைத்து விடுவார்கள்.
தியாகராஜ மண்டபத்தின் வடக்கு சுவரில் ஜ்வரதேவர் அருவுருவமாக எழுந்தருளி உள்ளார். உற்சவத் திருமேனிகள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கின்றன.
மேலத் திருமாளிகைப் பத்தியில் உள்ள சோமாஸ்கந்தரின் கற்சிற்பம் மிகவும் அழகாக இருக்கின்றது. அடுத்து சப்த விடங்கர்களை தரிசிக்கலாம். க்ஷேத்ர பாலகராக பைரவர் உள்ளார்.
உட்கோபுரத்தின் வடக்கு பகுதியின் கிழக்கு பகுதியில் சனீஸ்வர பகவான் சிறப்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். அபயஹஸ்தம் கொண்டு அனுக்ரஹ மூர்த்தியாக இருப்பது மேலும் சிறப்பு. மூலவரை தரிசித்துவிட்டு பின்னரே இவரை தரிசிக்க வேண்டும். கோபுர வாசலில் கற்பக விநாயகர்.
வைகாசி மாதம் உத்திரட்டாதியில் கொடியேற்றி 18 நாட்கள் பெருவிழா நடத்துகின்றனர். இறுதி நாளில் இடையனுக்கு காட்சி கொடுத்த நிகழ்வை ஐதீகமாக நடத்திக் காட்டுகின்றனர். புரட்டாசி பௌர்ணமியில் தியாகேசரை இந்திரன் வழிபட்ட சிறப்பு விழா நடைபெறும்.
உன்மத்த நடன நிகழ்ச்சியின்போது அடதாளத்தை எல்லா ராகங்களுடன் சேர்த்து சுத்த மத்தளம் வாசிப்பது வழக்கம். சனிப்பெயர்ச்சி விழாக்களின் போது ஊர் முழுவதும் ஜனத்திரளாக இருக்கும்.
தேவாரத் திருத்தலம், சப்தவிடங்க ஸ்தலங்களுள் ஒன்று, நவக்கிரக ஸ்தலங்களுள் ஒன்று - சனீஸ்வரர் ஸ்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.