அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில் (திருவதிகை)
God Name : மூலவர்: வீரட்டேஸ்வரர், உற்சவ மூர்த்தி: திரிபுராந்தகர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவள்ளூர்
Call : +91-
வீரம் நிறைந்த உன்னதச் செயல்களைப் புரிந்த சிவபெருமானை வீரட்டகாசர் அல்லது வீரட்டேஸ்வரர் என்றும், அவ்வாறு வீரம் புரிந்த பின் வீற்றிருக்கும் இடங்களை வீரஸ்தானம் அல்லது வீரட்டானம் என்றும் அழைப்பார்கள். தாரகாசுரனின் மூன்று குமாரர்களான வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகிய மூவரும் அவர்களது தந்தையின் மறைவுக்குப் பிறகு, கடுந்தவம் புரிந்தனர். அவர்களது தவத்தால் மகிழ்ச்சி கொண்ட பிரம்மன் பிரத்யட்சமாகி, வேண்டும் வரங்களைக் கேட்டார். இறவா வரத்தைக் கேட்டனர். பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீர வேண்டும் என்ற நியதி இருப்பதால், அந்த வரத்தைத் தர பிரம்மதேவர் மறுத்துவிட்டார். அளவற்ற செல்வங்களுடன் கூடிய பறக்கும் கோட்டைகளை மூவருக்கும் தருமாறும், அந்தக் கோட்டைகள் விண்ணில் பறந்துகொண்டிருக்கும்போது, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு இடத்தில் ஒன்றாகச் சந்திக்கும் வேளையில், அனைத்துத் தேவர்களின் சக்தியில் பாதியைத் தன்னுள் தாங்கும் வல்லமை படைத்த ஒருவனால் மட்டுமே அந்தக் கோட்டைகளைத் தகர்த்து, இவர்களுக்கு அழிவை உண்டாக்க வேண்டும் என்பதாக வரம் கேட்டுப் பெற்றனர். பொன், வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று கோட்டைகளில் ஆகாயத்தில் பறந்துகொண்டு பார்க்கும் அனைவரையும் இம்சித்து வந்தனர். இவர்களது அட்டகாசம் தாங்க முடியாமல் துன்புற்ற அனைவரும் சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். அவர்கள் பெற்ற வரத்தின்படியே, அவர்களை அழிக்கப் புறப்பட்டார் சிவபெருமான். அனைத்துத் தேவர்களின் சக்தியையும், பலத்தையும் பாதி தருமாறு கேட்டுப் பெற்று போருக்குப் புறப்பட்டார். விஸ்வகர்மாவை வரவழைத்து விசித்திரமான தேர் ஒன்றினை வடிவமைத்துச் செய்யப் பணித்தார். சூரிய-சந்திரர்கள் தேர் சக்கரங்களாகவும், பருவங்கள் தேர்க் கால்களாகவும், வேதங்கள் குதிரைகளாகவும், பிரம்மதேவன் சாரதியாகவும், ஓம் எனும் பிரணவ மந்திரத்தைச் சாட்டையாகக் கொண்டும் புறப்பட்டது தேர். மேரு மலையை வில்லாகவும், வாசுகியை நாணாகவும் கொண்டு புறப்பட்ட சிவபெருமானின் கரங்களில் திருமால் அம்பாகத் திகழ்ந்தார். முப்புரங்களில் சுற்றிப் பறந்த மூவரும், ஓராயிரம் ஆண்டுகள் முடித்து, மூன்று கோட்டைகளும் வானில் ஓரிடத்தில் ஒன்றாகச் சந்திக்கும் வேளை நெருங்கியது. அபிஜித் முகூர்த்த வேளையாகவும், அவர்களை அழிக்க உகந்த வேளையாகவும் இருந்தது. சிவபெருமான் முப்புரங்களைப் பார்த்துப் புன்னகை செய்தார். மூன்றும் பற்றிக்கொண்டு எரிந்தன. பிறகு, அவர்கள் பெற்றிருந்த வரத்திற்காக அம்பை எய்தார். முப்புரங்களும் வெந்து சாம்பலாயின எனப் புராண வரலாறு கூறுகிறது. மருள்நீக்கியார் என்பவருக்குத் திருநாவுக்கரசர் என்று இறைவன் பெயர் சூட்டிய ஸ்தலம். திருநாவுக்கரசரின் சூலை நோயைக் குணப்படுத்திய இடம். திருஞானசம்பந்தருக்கு நடனக்கோலம் காட்டியருளிய ஸ்தலம். சுந்தரருக்குத் திருவடி தீட்சை தந்து நிகழ்ந்த ஸ்தலம். அஷ்ட வீரட்டானங்களுள் ஒன்று - தேவாரத் திருத்தலம்.
எண்கோண விமானமும், தேர் போன்ற வடிவ அமைப்பும் கொண்ட மூலஸ்தானம். மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் வீரட்டேஸ்வரர். பதினாறு பட்டைகளுடன் கூடிய பெரிய லிங்க பாணத்துடன், ஷோடஸ கலா லிங்கமாக, கம்பீரமாக கிழக்கு பார்த்து தரிசனம் தருகின்றார். சுயம்பு லிங்கம். மூலவரின் திருமேனிக்குப் பின்னால் ஸ்வாமி-அம்பாள் திருமணக் கோலம் புடைப்புச் சிற்பமாக உள்ளது. மூலஸ்தானத்தை ஏராளமான சுதைச் சிற்பங்கள் அலங்கரிப்பதால் சித்ர மேரு பர்வதம் என்று அழைக்கப்படுகிறது. இதன் அருகே சிவபெருமானின் திரிபுராந்தகக் கோலம் பெரிய சுதைச் சிற்பமாக உள்ளது. சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கின்றன. விசேஷமாக சண்டேஸ்வரர், ஏகபாத மூர்த்தி, ரிஷபாரூடர், சதுர்முக லிங்கம் ஆகிய மூர்த்தங்கள் குறிப்பிடத்தக்கவை. சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக பல சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ராவணன் கயிலாயத்தைத் தூக்கும் சிற்பம் மிக அழகாக உள்ளது. வீரட்டேஸ்வரர் கருவறையின் வலது பக்கம் உள்ள சந்நிதியில் அம்பாள் பெரியநாயகி எழுந்தருளி அருள் பாலிக்கிறாள். திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறாள். கிழக்கு பார்த்த சந்நிதி. முன்மண்டபத்தில் உற்சவ மூர்த்தியாக திரிபுராந்தகர் எழுந்தருளியுள்ளார். இவரே திரிபுரசம்ஹார மூர்த்தி. வீரட்டேசரின் சபை என்று போற்றப்படுகிறது. சிவபெருமானின் அழகிய திருவுருவம் - உமா தேவியுடன் நின்ற திருக்கோலம். மேற்கரங்களில் மான்-மழு ஏந்தியும், முன்கரங்களில் வில்-அம்பு ஏந்தியும், தெற்கு நோக்கி தரிசனம் தருகின்றார். வைகாசி மாதத் திருவிழாவின்போது, திரிபுராந்தகர் தேரில் வலம் வந்து, திரிபுராதிகளை எரிப்பதை ஐதீகமாகக் கொண்டாடுவார்கள். வட பிரகாரத்தில் அப்பரின் சூலை நோய் தீர்த்த சூல தீர்த்தக் கிணறு இருக்கின்றது. திருநாவுக்கரசரின் தமக்கையான திலகவதியாரின் திருவுருவம் தெற்குப் பிரகாரத்தில் உள்ளது. முழங்காலுக்கு மேல் கட்டிய உடையுடன் உழவாரப்படை ஏந்திய கோலத்தில் காணப்படும் அப்பர் பெருமானின் அழகிய உற்சவ திருவுருவத்தை அர்த்த மண்டபத்தில் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.