அருள்மிகு திருமூலட்டானநாதர் திருக்கோவில் (சிதம்பரம்)

God Name : திருமூலநாதர் எனப் போற்றப்படும் மூலட்டானேஸ்வரர், தில்லை நடராஜர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவள்ளூர்

Call : +91-

பஞ்சபூதங்களில் மகாபூதமாக இருப்பது ஆகாயம். மற்ற நான்கு பூதங்களின் பிறப்பிடமும் இதுவே. பூமியில் ஆகாயத் தலமாக இருப்பது சிதம்பரம். சித் என்றால் ஞானம் - அம்பரம் என்றால் பெருவெளி. ஞானப்பெருவெளியான சிதம்பரம் தரிசிக்க முக்தி தரும் க்ஷேத்திரம். பூலோக கயிலாயம் என்றே கூறுவர். சிற்சபையினைச் சுற்றி அமைந்துள்ள திருமாளிகையின் இரண்டாம் அடுக்கில் ஆகாசலிங்கத்தைத் தரிசிக்கலாம். ஆதியில் தில்லை மரங்கள் மிகுந்து வளர்ந்திருந்த பகுதியாக இருந்ததால் இவ்வூருக்கு தில்லை என்ற பெயர் வந்தது. வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவர் வழிபட்டதால் பெரும்பற்றபுலியூர் எனப் பெயர் பெற்றது. இதுவே வடமொழியில் வியாக்ரபுரம் எனப்பட்டது. இதன் காரணமாக ஐந்து புலியூர்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஆடவல்லானின் நடனத்தைப் பார்த்ததால் கிடைக்கும் மகிழ்ச்சியை, திருமால் மூலமாகக் கேள்விப்பட்ட ஆதிசேஷன், தானும் அந்த நடனத்தைக் காண வேண்டுமென, கயிலையிலும் இத்தலத்திலும் அமர்ந்து கடுந்தவம் புரியலானார். ஆதிசேஷனே தங்களுக்கு மகனாகப் பிறக்க வேண்டுமென வேண்டி தவமிருந்தனர் அத்ரி-அனுசுயா தம்பதியினர். இந்த இரண்டு தவங்களின் பயனாக ஆதிசேஷன் பாம்பாகப் பிறந்து, அனுசுயாவின் பாதங்களில் விழுந்தார். பாதங்களில் அஞ்சலி செய்வதாக விழுந்ததால் பதஞ்சலி எனப் பெயர் கொண்டு வளர்ந்து வந்தார். காசியில் உள்ள மத்யந்த முனிவரின் மகனாகப் பிறந்த மாத்யந்தன் மலர்களைப் பறித்து சிவபூஜை செய்து வந்தான். பொழுது விடிந்துவிட்டால் மலர்களின் தேனைப் பருக வரும் வண்டுகள், மலர்களை எச்சில் செய்து விடுவதால், அதை சிவபூஜைக்குப் பயன்படுத்த விரும்பாத மாத்யந்தன், சிவபெருமானிடம் முறையிட்டு அழுது புலம்பி, தான் பொழுது விடிவதற்குள் இருட்டில் மலர்களைப் பறிக்க உதவ வேண்டும் என வேண்டினான். இருட்டில் பார்க்கும் சக்தியையும், வேகமாக மரம் ஏற ஏதுவாகப் புலிக்கால்களையும் தந்து உதவினார் சிவபெருமான். அன்று முதல் மாத்யந்தன் வியாக்ரபாதன் என்று பெயர்கொண்டான். (வியாக்ர என்றால் புலி) அவனது தந்தையின் அறிவுரைப்படி காசியிலிருந்து இவ்வூருக்கு வந்து, தில்லைவனத்தில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள திருமூலட்டானரைத் தரிசித்து வழிபடலானான். ஆசை கொண்டு தவம் மேற்கொண்டான். தில்லை சிற்றம்பலத்தில் தை மாதம் வியாழக்கிழமை பூச நட்சத்திர நன்நாளில் உச்சிப் பொழுதில் சிவகாமசுந்தரி பார்த்திருக்க, வியாக்ரபாதர், பதஞ்சலி, ஜைமினி ஆகிய மூவரின் வேண்டுகோளின்படி தில்லை மூவாயிரவர் காண, நடராஜப் பெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிக் காட்டினார். அப்படியே ஐம்பொன் சிலையானார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் சிதம்பரத்தில் 10 நாட்கள் திருவிழா கொண்டாடுகின்றனர். இவ்விழாவில் மூன்று முனிவர்களின் உலாத் திருமேனிகளும் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து திருமூலநாதரின் சந்நிதியை அடைகின்றன. இரண்யவர்மன் எனும் அரசன் இவ்வாலயத்தை நிர்மாணித்ததாகக் கூறுவர். கங்கைக் கரையிலிருந்து மூவாயிரம் தீட்சிதர்களைக் கூட்டிவந்து தில்லையில் குடி வைத்தான் புலியூர் அரசன். எண்ணிக்கையில் ஒன்று குறைந்தது. மறைந்த ஒருவர் சபாநாயகரே என அசரீரி ஒலித்தது எனக் கூறப்படுகின்றது. திருநாளைப்போவார் எனப்படும் நந்தனார், இறைவனோடு கலந்த ஸ்தலம். உருவமாக நடராஜரும், அருவுருவமாக ஸ்படிக லிங்கமும், அருவமாக சிதம்பர ரகசியமும் - ஆக மூன்று நிலைகளில் தரிசனம் தரும் ஸ்தலம். தேவாரத் திருத்தலம் - பஞ்ச பூத ஸ்தலங்களுள் ஒன்று (ஆகாயம்) - பஞ்ச சபைகளுள் ஒன்று (கனகசபை) - ஐந்து புலியூர்களில் ஒன்று (பெரும்பற்றபுலியூர்)
நான்கு திசைகளுக்கும் நான்கு கோபுரங்கள் - சிந்தையை மகிழ்விக்கும் எழில் சிற்பங்களுடன் காணலாம். நான்கு பிரகாரங்கள், ஐந்து சபைகள், மண்டபங்கள், பத்து தீர்த்தங்கள் உள்ளடக்கிய பெரிய கோவில். தெற்கு பிரகாரத்தின் மேற்கில் எழுந்தருளியுள்ள முக்குறுணி விநாயகர் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டு, எட்டடி உயரமுள்ள திருமேனியுடன் தரிசனம் தருகிறார். மிகுந்த வரப்பிரசாதி எனக் கூறப்படுகிறது. மேற்கு கோபுரத்தின் வெளியே புடைப்புச் சிற்பமாக காட்சி தரும் கற்பக விநாயகரே ஸ்தல விநாயகர் ஆவார். மேற்கு கோபுரம் வழியே உள்ளே வந்து வலம் வருகையில் சித்திரகுப்தர் சந்நிதியை தரிசிக்கலாம். அடுத்துள்ள சிவகாமி கோட்டத்தில் உள்ள மண்டபத்தின் கூரையில் - சிவபெருமானின் பிட்சாடனர் வடிவமும், தாருகாவனத்து முனிவர்கள் படும்பாடும், திருமாலின் மோகினி வடிவமும், பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் வகையில் அற்புதமாக உள்ளது. சிவகாமி அன்னை அழகு திருவுருவமாக காட்சி தருகிறாள். பாண்டிய நாயகம் எனும் திருநாமத்துடன், வள்ளி-தெய்வயானையுடன் காட்சி தரும் மயில் மீதமர்ந்த ஆறுமுகனின் வடிவம் மனதை விட்டு நீங்காதது. அழகிய சிற்பங்களுடன் கூடிய பல மண்டபங்களையும், திருவுருவங்களையும் தரிசித்து மகிழலாம். குலோத்துங்க சோழன் திருமாளிகை எனப்படும் இரண்டாம் பிரகாரத்தின் கீழைத் திருவாயிலின் இரண்டு பக்கங்களிலும் புருஷா மிருகங்கள் உள்ளன. எதிரே கனகசபை உள்ளது. மேலைத் திருவாயிலின் எதிரிலுள்ள மதிலில் திருமுறை கண்ட விநாயகர் உள்ளார். ராஜராஜ சோழனுக்கும், நம்பியாண்டார் நம்பிக்கும் திருமுறைகள் இருந்த இடத்தைச் சுட்டிக் காட்டியவர் என்பதால் இந்தப் பெயர். மூலஸ்தானத்தில் திருமூலநாதர் எனப் போற்றப்படும் மூலட்டானேஸ்வரர், சிவலிங்க வடிவமாக எழுந்தருளி தரிசனம் தருகிறார். சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர். உமையன்னை உடன் எழுந்தருளி தரிசனம் தருகிறாள். மற்ற ஸ்தலங்களில் உள்ள மூர்த்திகள் இந்த ஹிருதய ஸ்தானத்தில் ஒடுங்கி, மீண்டும் காலையில் அந்தந்த ஸ்தலங்களுக்குத் திரும்பிச் செல்வர். கலைகள் எல்லாம் அர்த்த ஜாமத்தில் இங்கு ஒடுங்குவதால், அர்த்த ஜாம தரிசனம் இங்கு விசேஷமாகக் கருதப்படுகிறது. இத்தலத்திற்குள்ளேயே பஞ்ச சபைகள் இருக்கின்றன. சித்சபை (அ) ஞானசபை அதாவது சிற்றம்பலம் விக்கிரம சோழன் திருமாளிகை எனப்படும் முதற் பிரகாரத்தின் நடுவே இருப்பது சிற்றம்பலம். ஒன்பது தங்கக் கலசங்களும், பொன் வேய்ந்த கூரையும் கொண்டது. ஞானக்கூத்தனான அம்பலவாணன் ஆனந்த நடனம் புரியும் சபை இது. பக்கத்தில் சிவகாமி. அழகான பஞ்சலோக விக்ரகங்களாக நடராஜரும் சிவகாமசுந்தரியும் தரிசனம் தருகின்றனர். சபாநாயகரான நடராஜரும், சிவகாமியும் நிற்கும் பிரம்மபீடத்தின் பத்து தூண்கள் ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் குறிக்கின்றன. சிதம்பர ரகசியம் இருக்கும் அம்பலம் இது. ஐந்து தூண்கள் ஐந்து புலன்களைக் குறிக்கின்றன. ஆனந்த கூத்தன் இருக்கும் சித்சபையின் திரையை விலக்கி தீபாராதனை காட்டும்போது, தங்க வில்வ மாலை ஜொலிக்கிறது. இதுவே சிதம்பர ரகசியம். எங்கும் வியாபித்துள்ள இறைவனை, உருவமற்ற அருவமாக தரிசிப்பதே சிதம்பர ரகசியத்தின் தாத்பர்யம். உருவமற்ற நிலைக்கு, தங்க வில்வ மாலை சாத்தி வழிபடுகின்றனர். கனகசபை அதாவது பொன்னம்பலம் சித்சபையை ஒட்டி அதன் முன்பாக உள்ளது. மூலஸ்தானத்தின் உட்பகுதியை சித்சபை என்றும், முன்னால் இருக்கும் வெளிப் பகுதியை கனகசபை என்றும் கூறுவர். அறுபத்திநான்கு கலைகளைக் குறிக்கும் வகையில், அறுபத்திநான்கு மரக்கால்கள்மீது அமைந்து, 21,600 பொன் தகடுகள் கொண்டு வேயப்பட்ட பொற்கூரையுடன் காணப்படுகிறது. மனிதனின் ஒரு நாள் சராசரி மூச்சு எண்ணிக்கையையும், நாடிகளையும் குறிப்பதாக 72,000 ஆணிகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் ஆறு வேளை அபிஷேகங்கள் பொன்னம்பலத்தில் நடைபெறும். (சித்சபை மற்றும் கனகசபைகளில் மின்சார விளக்குகள் இல்லை. நெய் விளக்கின் வெளிச்சத்தில் தரிசிக்கலாம். சிற்றம்பலத்தையும் பொன்னம்பலத்தையும் பஞ்சாட்சரப் படிகள் இணைக்கின்றன.) தேவசபை அதாவது பேரம்பலம் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ளது. பஞ்ச (உற்சவ) மூர்த்திகள் எழுந்தருளும் அம்பலம் இது. கிழக்கு, வடக்கு, மேற்கு பக்கங்களில் மாடங்களோடு கூடிய மூடுமண்டபம் உள்ளது. சுற்றியுள்ள உயரமான மேடையில் நர்த்தன விநாயகர், சுப்ரமண்யர், லிங்கோத்பவர் சந்நிதிகளைக் காணலாம். நிருத்த சபை அதாவது தேரம்பலம் குதிரைகள் பூட்டிய தேரின் வடிவில் காணப்படுவதால் தேரம்பலம் எனும் பெயர் பெற்றுள்ளது. இங்கு ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியை தரிசிக்கலாம். வலது காலை தலைக்கு மேல் தூக்கி, கால் விரல்களாலேயே காதுக்குழையை மாட்டி, ஆடிய ஊர்த்துவ தாண்டவம் நிகழ்ந்த இடம் இது. தோற்றுப்போன நிலையில் காளியின் திருவுருவத்தைக் காணலாம். எட்டுக்கரங்களுடன் பஞ்சமுக வாத்யம் வாசிக்கும் பாணாசுரன் சிற்பத்தைக் காணலாம். ராஜ சபை அதாவது அரசம்பலம் சிவகங்கை தீர்த்தத்தின் கிழக்கில் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபம். ஆயிரம் தலைகளுடைய ஆதிசேஷன், பதஞ்சலியாக உருவெடுத்து, (மறைவிலிருந்து) ஆயிரம் சீடர்களுக்கு வியாகரண மாபாஷ்யத்தை விளக்கிய இடம் இது. சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் அரங்கேறிய இடமும் இது. மார்கழி திருவாதிரை மற்றும் ஆனித்திருமஞ்சனம் விழாக்கால தினங்களில் வீதிவுலா வரும் நடராஜர்-சிவகாமி அன்றைய இரவில் இங்குதான் தங்குவார்கள். மறுநாள் நண்பகலில் நடராஜர் ஆடியபின், பின்னர் சிற்றம்பலம் திரும்புவர். சிவபெருமான் அந்தரங்கமாக நடமிடும் பொற்கோவிலின் உள்ளே, ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் திகம்பரராக நின்ற கோலத்தில் உலாத் திருமேனியாக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள ஆதி சண்டர் நான்கு முகங்களுடன் காணப்படுகிறார். சித்சபையின் கிழக்கிலுள்ள சந்நிதியில் பிரம்மா சண்டீசராக இருப்பதாகக் கூறுகின்றனர். இங்கிருந்தபடியே விஷ்ணுவின் சயனக் கோலம் மற்றும் சிவபெருமானின் திருக்கூத்து ஆகியன தரிசிக்கும் விதத்தில் அமைந்திருப்பதால், மும்மூர்த்திகளை தரிசித்த மகிழ்ச்சி கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.