அருள்மிகு ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் (திருவெண்காடு)
God Name : மூலவர்: ஸ்வேதாரண்யேஸ்வரர், சிறப்பு மூர்த்தங்கள்: அகோர மூர்த்தி, புத பகவான்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய மூன்றுமே சிறப்பாக இருக்கும் ஸ்தலம் இது. வேதியர்கள் மிகுந்து இருந்த தலம். அவர்கள் வேதம் ஓதும் ஒலியைப் பயின்று, அவற்றை திரும்பக் கூறுமாம் கிளிகள். காசிக்கு சமமான தீர்த்தச் சிறப்புகளைக் கொண்ட ஸ்தலம் எனப் போற்றப்படுகிறது.
அசுரனான சலந்திரனின் மகன் மருத்துவன், தேவர்களையும் முனிவர்களையும் வெறுப்பவன். இவன் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து ஒரு சூலாயுதத்தை வேண்டிப் பெற்றான். தேவர்களுக்கு சொல்லொண்ணா இன்னல்களைத் தர ஆரம்பித்தான். மருத்துவனின் கொடுமைகளுக்குப் பயந்து அவர்கள் மறைந்து வாழ்ந்தனர்.
அவதியுறும் தேவர்களைக் காக்க வந்த நந்தியிடம் போர் புரிந்த மருத்துவன், சூலாயுதம் துணைகொண்டு நந்தியின் கொம்புகளை முறித்து, காதுகளை அறுத்து, இம்சித்தான். நந்தியின் உடலில் ஒன்பது துளைகள் செய்து அனுப்பிவிட்டான். இதனையறிந்த சிவபெருமான் பெருங்கோபம் கொண்டார். அவரது கோபங்கள் ஒரு வடிவத்தைப் பெற்று அவர் முன் நின்றது. அந்தக் கோர உருவமே அகோர மூர்த்தி.
சிவபெருமானின் பஞ்ச முகங்களான - தத்புருஷம், வாமதேவம், ஸத்யோஜாதம், அகோரம் - இவற்றுள் அதோமுகமாய் மறைந்திருந்த அகோர முகத்திலிருந்து ஆவிற்பவித்தவர் அகோரமூர்த்தி.
அந்த வடிவம் அசுரனை சம்ஹாரம் செய்யப் புறப்பட்டது. அகோரமூர்த்தியின் வடிவத்தைக் கண்ட அசுரன் பயத்தால் நடுநடுங்கிப் போய், அகோரமூர்த்தியுடனேயே ஐக்கியமாகிவிட்டான். சரணடைந்த மருத்துவனை அகோரமூர்த்தியின் காலடியிலும், காயமடைந்த ரிஷப தேவரை சுவாமி சந்நிதியின் நிருத்த மண்டபத்திலும் காணலாம்.
பிரம்ம பிரளயம் ஏற்பட்டு பிரம்மா அழிவது இத்தலத்தில்தான். (அருகே பிரம்ம சமாதி உள்ளது). புதிய பிரம்மன் அம்பிகையிடம் சிருஷ்டித் தொழிலை புதிய பாடமாகக் கேட்பார். பிரம்மாவிற்கு வித்தையை உபதேசம் செய்ததால், 'பிரம்ம வித்யாம்பிகை' என்றொரு திருநாமம். 'வேயன்ன தோளி நாச்சியார்' என கல்வெட்டுகளில் உள்ளது.
திருநாங்கூரிலுள்ள மதங்காஸ்ரமத்தில், மதங்க முனிவர்க்கு மகளாகத் தோன்றி, திருவெண்காடரை நோக்கி தவமிருந்து, அவரையே மணந்தவள் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சக்தி பீடங்களுள் இது பிரணவ பீடம்.
ஸ்ரீ ராமபிரான் கரன் என்பவனோடு போர் புரிவதை வர்ணிக்கும் வால்மீகி ராமாயணத்தில் சிவ சம்பந்தமான குறிப்பு - 'ஸ்வேத வனத்தில் ருத்ரனால் தகிக்கப்பட்டு அந்தகன் மாய்ந்தது போல்' என்று வருகின்றது. அந்த ருத்ரனே அகோரமூர்த்தியாக திருவெண்காட்டில் இருக்கின்றார். இந்த மேற்கோளிலிருந்து இத்தலம் மிகவும் பழமையானது என அறியலாம்.
விருத்திராசுரனைக் கொன்ற பாவம் தீரவும், பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெறவும், தேவேந்திரன் இவ்விறைவனை வழிபட்டு நற்கதி பெற்றான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. துர்வாசரிடம் பெற்ற சாபத்தைப் போக்கிக்கொள்ள ஐராவதம், இத்தலத்தில் ஆனைமடு எனும் தீர்த்தம் அமைத்து, இவ்விறைவனை வழிபட்டு சாபத்தைப் போக்கிக்கொண்டது. சுவேதகேது என்பவனுக்கு யம தூதர்களால் வரவிருந்த இடர்களைப் போக்கிய ஸ்தலம் இது. பட்டினத்தார் சிவதீட்சை பெற்ற ஸ்தலம். சூரிய-சந்திரர்கள், அக்னி ஆகியோர் வழிபட்ட ஸ்தலம்.
பெண்ணாகடத்தைச் சேர்ந்த அச்சுத களப்பாளர், புத்திர பாக்கியம் வேண்டி வழிபட்டார். இத்தலத்து அன்னையின் அருளால் மெய்கண்ட தேவரைப் பெற்றார்.
பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் அகோர மூர்த்திக்கு விசேஷ பூஜைகளும், மூன்றாவது ஞாயிறன்று மகாருத்ராபிஷேகம், விபூதி அலங்காரங்களும் நடைபெறும்.
கிழமைகளில் இவருக்கு உகந்தது ஞாயிற்றுக்கிழமை. இரவு மூன்றாம் ஜாமம் இவருக்கு உரியது. மோகனகீதப் பிரியன் என்பதால் இவரது சந்நிதியில் மோகன ராகம் மட்டுமே நாதஸ்வரத்தால் வாசிக்கப்படுகிறது.
மாசி மாதம் கிருஷ்ண பட்சம் திருதியை பூர்வபல்குனி நட்சத்திரம் - அகோரமூர்த்தியின் அவதார தினம்.
மாசி மகத்து பூர நட்சத்திர நாளில் அகோரமூர்த்திக்கு விசேஷ ஆராதனைகள், உற்சவங்கள் நடைபெறும். திருவெண்காட்டின் பெருவிழாவின் நான்காம் நாளான மாசி மகத்தன்று, இறைவன் காவிரி சங்கமத்திற்குச் சென்று, தீர்த்தமளிக்கின்றார். ஐந்தாம் நாள் விழாவில், மருத்துவனை சம்ஹாரம் செய்வதை ஐதீகமாகக் கொண்டாடுவர். பதினோராம் நாள் தெப்பம்.
தேவாரத் திருத்தலம், சக்தி பீடங்களுள் ஒன்று - பிரணவ பீடம், நவக்கிரக ஸ்தலங்களுள் ஒன்று - புதன் ஸ்தலம், சப்த வனங்களுள் ஒன்று - ஸ்வேத வனம்.
மூலவர்: ஸ்வேதாரண்யேஸ்வரர், சிறப்பு மூர்த்தம்: அகோர மூர்த்தி மற்றும் புத பகவான்.
அம்பாள்: பிரம்ம வித்யாம்பிகை எனப்படும் வேயன்னதோளி நாச்சியார்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் மூலவரான ஸ்வேதாரண்யேஸ்வரர். திருவெண்காட்டுநாதர் என்றொரு திருநாமம். சுயம்பு மூர்த்தம். உயரமான பாணம் கொண்டு தரிசனம் தரும் அழகிய ஒளி வீசும் லிங்கம்.
ஸ்வாமி கோஷ்டத்து மூர்த்தங்களுள் சுதை வடிவிலான சட்டைநாதரும், புடைப்பு சிற்பங்களாக காணப்படும் சிவப்பிரியரும் மற்றும் ஐராவதமும் மிகவும் அழகானவை.
இங்குள்ள பெரிய வாரணப்பிள்ளையார் மற்றும் துண்டி விநாயகர் இருவரும் அகோர மூர்த்திக்கு ஏகாக்ஷர மந்திரத்தை உபதேசித்தவர்கள்.
சோமாஸ்கந்தர், காட்சி நாயனார், சண்டேஸ்வரர், சுவேதலிங்கம் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. உட்பிரகாரத்தில் வீரபத்ரர், இடும்பன், சுகாசன மூர்த்தி, நாகேஸ்வரர், ஆவுடையார் பத்ரபீடம், பஞ்சலிங்கம், விசாலாட்சி உடனாய விஸ்வநாதர், பைரவர், அஷ்டபுஜ துர்க்கை ஆகிய திருவுருவங்கள் அழகாக இருக்கின்றனர்.
இத்தலத்திலுள்ள சிவ-பார்வதி உலாத்திருமேனிகள், கன்னிகாதான திருமணக் கோலத்தில் உள்ளன. நான்கு திருக்கரங்களைக் கொண்ட சிவபெருமானின் திருமேனி பேரெழிலுடன் விளங்குகிறது. மான் - மழு ஏந்திய மேற்கரங்களுடனும், கீழ் இடது கரம் அபய-வரத முத்திரை கொண்டும், கீழ் வலது கரம் அம்பிகையை ஏற்கும் பாவனையிலும் காட்சி.
அம்பிகையின் வலப்புறமாக கன்னிகாதானம் செய்து தரும் திருமாலும், பார்வதியின் தோழியாக லட்சுமியும், திருமண வேள்வியை நடத்தும் பிரம்ம தேவரும் காட்சி தருகின்றனர்.
விநாயகர், தும்புரு, நாரதர், கந்தர்வர்கள், கணங்கள், சரஸ்வதி தேவி, மகரிஷிகள் மற்றும் முனிவர்கள் சூழ, மேற்கூறிய கன்னிகாதான திருமணக் கோலத்தை விவரிக்கும் அற்புதமான ஓவியம் ஒன்றும் மகா மண்டபத்தில் காணப்படுகிறது.
செப்புத்தகடு வேய்ந்த கூரையுடன் கூடிய நடராஜர் சபையில் எழுந்தருளி ஹஸ்தி நடனம் ஆடும் அழகிய ஆடல்வல்லான் மற்றும் அவரது சந்நிதியில் உள்ள ஸ்படிகலிங்கம் அவசியம் தரிசிக்க வேண்டியவை.
இவர் - ஆனந்தத் தாண்டவம், கௌரி தாண்டவம், காளி நிருத்தம், முனி தாண்டவம், சந்தியா தாண்டவம், திரிபுரத் தாண்டவம், சம்ஹாரத் தாண்டவம், புஜங்க லலிதம், பைஷாடனம் என 9 வகை (நவநிருத்த கணம்) நடனங்களை இத்தலத்தில் ஆடியுள்ளார். இவரது காலில் 14 சதங்கைகள் கொண்ட காப்பு இருக்கின்றது. இவை 14 புவனங்களை குறிப்பதாகும். 81 சங்கிலி வளையங்களை கோத்த அரைஞாண் இடுப்பில் தவழ்கிறது. 28 யுகங்களைக் குறிக்கும் வகையில் 28 எலும்பு மணிகள் கட்டிய ஆரம் அலங்கரிக்கிறது. 16 கலைகளை உணர்த்த 16 சடைகள் உள்ளன. இடையில் புலித்தோல் அணிந்துள்ளார்.
தில்லையில் நடைபெறும் ஆறு அபிஷேகங்கள், பஞ்சகிருத்திய பூஜைகள், ஆனித் திருமஞ்சனம், மார்கழி, திருவாதிரை ஆகிய விழாக்கள் இங்கும் சிறப்புற நடைபெறுகின்றன. ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் நான்கு அபிஷேகங்கள், விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
இங்குள்ள தட்சிணாமூர்த்தியிடமிருந்து அகோரமூர்த்தி தோன்றினார் என்றும் இவரே ஆதியில் இங்கு வீற்றிருந்த சிவபெருமான் என்றும் கூறுவர். மற்றைய ஆலயங்களில் சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் இவர், இங்கு பிரம்மனுக்கு உபதேசம் செய்கின்றார். மேதாவித்யா தட்சிணாமூர்த்தி என்பர்.
நடனசபையின் வடமேற்குப் பகுதியில் அகோர மூர்த்தி எழுந்தருளியுள்ளார். மிகுந்த வரபிரசாதி. சிவபெருமானது தெற்கு பார்த்த ஞானமுகத் தெய்வமே அகோரம். பார்ப்பதற்கு அதி உக்ரமான மூர்த்தியாக இருந்தாலும் இதமானவரே. மூலவருக்கும் உற்சவருக்கும் தனித்தனி கோவில்கள்.
ஜ்வாலையுடன் கூடிய சிவந்த கூந்தலும், தீப்பொறிகளை கக்கும் நெற்றிக் கண்களும், தொங்குகின்ற மஞ்சள் நிற மீசை, கோரைப் பற்கள், கருத்த மேனி, அஷ்டபுஜங்களில் கிளி உருவத்துடன் கூடிய வேதாளம், மணி, வாள், சூலம், வெண்டலை, கடி, துடி, அகோராஸ்திரம் ஆகியன கொண்டும், மற்ற இரு கரங்களில் சூலத்தை சாய்த்து பிடித்தவாறும் காட்சி தருகின்றார்.
இவருக்கு எதிர் சந்நிதியில் காளிதேவி எழுந்தருளியுள்ளார். அகோரேசி என்று பெயர். அகோரமூர்த்தியின் பெரிய உருவத்திற்கேற்ப பெரிய திருவுருவமாக காணப்படுகின்றார்.
சந்திர புஷ்கரணியின் கரையில் அன்னை பிரம்ம வித்யாம்பிகையின் கோவில் உள்ளது. தாமரைப் பூவும் அக்க மாலையும் கொண்ட மேற்கரங்கள், அபய-வரத ஹஸ்தங்களாக கீழ்க்கரங்கள் என சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருவுருவம். இவள் ஸ்ரீ மந்திரிண்யம்பா ஸ்வரூபிணியான ஸ்ரீ மகா சியாமளாவின் ஸ்வரூபம்.
அம்பாள் சந்நிதியின் உட்பிரகாரத்தில் பிள்ளை இடுக்கி அம்மனை தரிசிக்கலாம். சம்பந்தரின் குரலைக் கேட்ட பெரிய நாயகி, அவரை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். இதனால் பிள்ளை இடுக்கி அம்மன் என்ற பெயர் கொண்டாள் எனக் கூறுவர்.
பிரம்ம வித்யாம்பிகை கோவிலின் வடபுறம் வித்யாகாரகனான புத பகவான் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். புதன் தசை, புதன் புக்தி ஆகியன தரும் கஷ்டங்களிலிருந்தும், மற்றும் புத தோஷங்களிலிருந்தும் விடுபட இவரை வழிபடுகின்றனர். சந்நிதி அருகே முள் இல்லாத வில்வ மரம் காணலாம்.
தெற்கில் சூரிய தீர்த்தமும், மேற்கில் சந்திர தீர்த்தமும், வடக்கில் அக்னி தீர்த்தமும் இருக்கின்றன. சூரிய தீர்த்தம் வெப்பமாகவும், சந்திர தீர்த்தம் குளிர்ச்சியாகவும், அக்னி தீர்த்தம் கந்தக சூடாகவும் உள்ளன. சூரியன், சந்திரன், அக்னி முறையே இவற்றுள் மூழ்கி, இறைவனை வழிபட்டதாக கூறுவர்.
சந்திர தீர்த்தக் கரை அருகே - வில்வம், கொன்றை, வடஆல் ஆகிய விருட்சங்கள் உள்ளன.
கோவிலின் வடகிழக்கில் அரசும்-வேம்பும் இணைந்த மேடை ஒன்றும் உள்ளது. வடஆல மரத்தினடியிலே - விநாயகர், மற்றும் ருத்ர பாதங்களைக் காணலாம். ருத்ர பாதத்தில் பித்ரு கடன் செய்பவர்களுக்கு 21 தலைமுறையின் தோஷங்கள் விலகுவதாக கூறப்படுகிறது. பிரம்மனின் சமாதியும் இங்கிருக்கிறது. பித்ரு கடன்களை செய்வதற்கு விசேஷமான ஸ்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.