அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் (திருவிற்குடி)

God Name : மூலவர்: வீரட்டானேஸ்வரர், வீரட்டானர்: ஜலந்திர சம்ஹார மூர்த்தி

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

முன்பொரு சமயம், தானே பெரியவன் என்ற எண்ணத்துடன் திரிந்த இந்திரன், கயிலை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவனது கர்வத்தை அடக்கும் பொருட்டு, சிவபெருமான் துவார பாலகனாக வேடம் கொண்டு நின்று கொண்டிருந்தார். ஒரு காவற்காரன் பதில் சொல்லாமல் இருப்பதா? என கோபம் கொண்ட இந்திரன் வஜ்ராயுதம் கொண்டு தாக்க முற்பட்டான். வஜ்ராயுதம் தூள் தூளானது. துவாரபாலகன் வேடம் விடுத்து, சிவபெருமான் கோபத்துடன் நின்றார். செய்த பிழையை பொறுத்தருள வேண்டினான் இந்திரன். அவனை மன்னித்து அனுப்பிவிட்டு தனது கோபக்கனலை கடலில் வீசினார். கடலில் விழுந்த கோபக்கனல் வலுவான குழந்தையாக உருப்பெற்றது. அந்தகாசுர வதத்தின்போது சிவபெருமானின் உடலிலிருந்து பெருகிய வியர்வை, திரண்டு கடலில் விழுந்து குழந்தையாக உருவெடுத்ததாகவும் கூறுவர். அக்குழந்தையை எடுத்து வளர்த்த வருணன், பிரம்மன் வந்தபோது, அதை எடுத்து அவர் மடி மீது கிடத்தினான். குழந்தை பிரம்மனின் தாடியைப் பிடித்திழுக்கவே, வலி பொறுக்காமல் பிரம்மன் கண்ணீர் சிந்த, அந்த கண்ணீர்த்துளி குழந்தை மீது பட்டது. கடல் நீரால் தாங்கப் பெற்றதாலும், பிரம்மனின் கண்ணீரை தரித்ததாலும், வருணன் வளர்த்ததாலும் அக்குழந்தைக்கு ஜலந்திரன் எனப் பெயர் சூட்டினார் பிரம்மன். பிரம்மனிடம் நிறைய வரங்களைப் பெற்ற அந்த அசுரக் குழந்தை வளர்ந்து பெரியவனானதும் கர்வம் கொண்டு அனைவரையும் துன்புறுத்தத் தொடங்கினான். காலநேமியின் மகள் பிருந்தையை மணந்த ஜலந்திரன், அவளது பதிபக்தியாலும், அவனது சிவபக்தியாலும், இதுவரை தோல்வியடையாமலும் மரணம் அடையாமலும் இருந்தான். திருமாலின் மாயையால், பிருந்தையின் பதிபக்தி நழுவியது. உடனே படைகளை இழந்து தோல்வியைத் தழுவினான் ஜலந்திரன். ஒரு சமயம் தனது வலிய தண்டத்தை எடுத்துக் கொண்டு, கயிலை நோக்கி புறப்பட்டான் ஜலந்திரன். அவன் செல்லும் வழியில், ஓர் முதிய அந்தணர் வடிவில் தோன்றிய சிவபெருமான், நீ எங்கே போகிறாய்? எனக் கேட்டார். முதியவரே, நான் சிவபெருமானை ஜெயிப்பதற்காக கயிலை போகப் போகிறேன், என்னை தடுக்காதே எனக் கூறினான் ஜலந்திரன். இதைக் கேட்ட அந்தணர் சிரித்தார். சிவபெருமானை ஜெயிப்பது அத்தனை சுலபமல்ல. நான் உனக்கு ஒரு சோதனை வைப்பேன், அதில் நீ வென்றால் மட்டுமே சிவபெருமானை ஜெயிக்க முடியும் எனக் கூறினார் அந்தணர். எதையும் செய்து முடிக்கும் பேராற்றல் கொண்டவன் நான், சோதனை என்னவென்று கூறும், நொடியில் செய்து முடிக்கின்றேன் என்றான் ஜலந்திரன். அந்தணர் தனது கால் கட்டைவிரலால் பூமியில் ஒரு வட்டத்தைக் கீறினார். இந்த வட்டத்தை பெயர்த்து எடுத்து உன் தலை மீது தாங்கு பார்க்கலாம் என்றார். அந்தணரே இதுவா ஒரு சோதனை? இப்போது பாரும் என்று வட்டத்தை எடுக்க முற்பட்டான். அவ்வளவு எளிதாக முடியவில்லை என்பதால் முழு பலத்தை பிரயோகித்து மிகவும் கஷ்டப்பட்டு எடுத்து தன் தலை மீது வைத்துக் கொண்டான். உடனே அந்த சக்கரம் அவனை இரண்டாக பிளந்து விட்டு, ஜோதி வடிவமாக இறைவன் திருக்கரத்தில் போய்த் தங்கியது. ஜலந்திரனின் தலை மீது சுழன்ற சக்கரம் அவனை பிளந்துவிட்டு, பூமியையும் பிளந்து கொண்டு போகத் துவங்கியது. இதனால் துன்புற்ற பூமி தேவி தன்னை காக்குமாறு சிவபெருமானிடம் முறையிட்டாள். (சக்கரம்) பாதாளம் செல்லும் சக்கரத்தை எடுத்து தனது வலது கையில் வைத்துக் கொண்டார். இதனால் சக்ரதரர் எனும் பெயர் கொண்டார். தரையில் சக்கரத்தை காலால் கீறியதால் அதனுடைய அடையாளம் சக்கர ரேகையாக அவரது காலில் பதிந்துள்ளது என ஸ்தல வரலாறு. கசபன் எனும் அரசனுக்கு உதவி செய்வதற்காக ததீசி முனிவர் மீது தனது சக்கரத்தை பிரயோகம் செய்தார் மஹாவிஷ்ணு. ததீசி முனிவர் மீது பட்ட விஷ்ணு சக்கரம் வலுவிழந்து கீழே விழுந்து விட்டது. ஜலந்திரனுக்காக சிவபெருமான் வட்டமிட்ட இடத்தில், திருமால் ஒரு திருக்குளம் அமைத்து சிவபெருமானை வழிபட்டு, ஜலந்திரனை அழித்த சக்கரத்தை கேட்டுப் பெற்றார் என ஸ்தல வரலாறு. தெற்கில் விளப்பாறு, வடக்கே பில்லாலி ஆறு பாய்ந்தோட, அதன் நடுவே விளங்கும் பகுதிக்கு திட்டை எனப் பெயர். இப்பகுதி பசுவின் காது போன்றே இருப்பதால், கோ என்பதை சேர்த்து கோத்திட்டை என்கின்றனர். இந்த இரண்டு ஆறுகளும் வீரட்டானேஸ்வரருக்கு மாலை அணிவிப்பது போல் ஊரைச் சுற்றி வருகின்றன. மஹாவிஷ்ணு தனது சார்ங்கத்தை தரையில் ஊன்றி நின்றபோது, வானவர்கள் கரையான் உருக் கொண்டு சார்ங்கத்தின் நுனியையும் வில்லின் நாணையும் அறுத்து விடுகின்றனர். வில் ஆகாயத்தில் பறந்து போய் கீழே விழுந்த இடம் என்பதால் விற்குடி என்றும் தனுஷாபுரம் என்றும் இவ்வூருக்கு பெயர் வந்ததாக கூறுவர். பாண்டவர்களின் அஞ்ஞாத வாசத்தின்போது, அர்ஜீணன் தனதுவில்லை இங்கு வைத்திருந்து, பின்னர் 12 வருடங்களுக்கு பிறகு எடுத்துச் சென்றதால் தனுஷாபுரம் எனப் பெயர் கொண்டதாகவும் கூறப்படுவதுண்டு. தேவாரத்திருத்தலம் - அஷ்ட வீரட்டானங்களுள் ஒன்று.
மூலவர்: வீரட்டானேஸ்வரர், வீரட்டானர்: ஜலந்திர சம்ஹார மூர்த்தி, அம்பாள்: ஏலவார் குழலி. மூலஸ்தானத்தில் மூலவரான வீரட்டேஸ்வரர் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிகின்றார். சுயம்பு லிங்கம். மேற்கு நோக்கி தரிசனம் தருகின்றார். ஸ்வாமியின் வலப்புறமாக தெற்கு பார்த்தவாறு அம்பாள் ஏலவார் குழலி அழகு திருவுருவமாக தரிசனம் தருகின்றாள். பெண்கள் கூந்தலில் பூசிக் கொள்ளும் மயிர்சாந்தை ஏலம் என்பார்கள். அதனை அணிந்து நீண்ட கூந்தலுடன் காணப்படும் அம்பாள் என்பதால் ஏலவார் குழலி என்று பெயர். பரிமள நாயகி என்ற திருநாமமும் உண்டு. கோபுர வாசலைக் கடந்ததும் ஸ்ரீ சுப்ரமண்யரையும் ஸ்ரீ மஹாலட்சுமியையும் தரிசிக்கலாம். வடப்புறமாக இருக்கும் கிழக்கு பார்த்த சந்நிதியில் சோமாஸ்கந்தரை தரிசிக்கலாம். வலச்சுற்றில் பைரவர், சனீஸ்வரர், சந்திரன், நால்வர், தட்சிணாமூர்த்தி ஆகியோரைக் காணலாம். மஹாமண்டபத்தில் துவாரபாலகர்களை அடுத்து இரண்டு பக்கங்களிலும் அனுக்ஞை விநாயகரும், வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமானும் இடம் பெற்றுள்ளனர். ஞானத் தீர்த்தக் கிணறு ஒன்றும் இருக்கின்றது. இதனருகே பிடாரியும், மாரியம்மனும் கோவில் கொண்டுள்ளனர். அம்பிகையை வழிபட்டு விட்டு வலம் வருகையில் வீரட்டகாச மூர்த்தியின் சபையைக் காணலாம். இங்கு எழுந்தருளி தரிசனம் தரும் ஜலந்திர சம்ஹார மூர்த்தியே உற்சவ மூர்த்தியான வீரட்டானர் ஆவார். மேற்கரங்களில் மான், மழு இருக்க, கீழ் வலது கரத்தில் சக்கரமும், கீழ் இடது கரத்தில் கத்திரி முத்திரையும் கொண்டு காட்சி தருகின்றார். இடது காது தாடங்கம் அணிந்தது போல் வித்தியாசமாக காணப்படுகின்றது. இது ஜலந்திரனை சம்ஹாரம் செய்த பின் பூமி தேவிக்கு அருள் செய்த கோலம் என்பர். ஜலந்திர சம்ஹார தாண்டவம் ஆடிக் காட்டிய ஸ்தலம். கோவிலின் எதிரே சங்க தீர்த்தக் குளம் இருக்கின்றது. இதை அட்டகுளம் என்பர். பிரம்மா தனது சாபம் நீங்க உண்டாக்கிய குளம் ஆகும். பின்புறமாக சக்கர தீர்த்தக் குளம் இருக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.